May 3, 2023
0 Comments
பல்லடம் ஸ்கை.சுந்தரராசன் ஐயா அவர்களது முற்போக்குத் திட்டம் ‘தென்னீரா’ என்ற தென்னையில் இருந்து எடுக்கும் இன்னீர் அல்லது தென்னைத்தேன். அதாவது தென்னையில் இளநீர் உருவாகி, அதை எடுத்து உண்ணும் முறைதான் நமக்குத் தெரியும், அல்லது புளிக்க வைத்த ‘தென்னங்கள்’ தெரியும். இது அப்படியல்லாமல், தென்னையின் பாளையைச் சீவி, (பனையில் பதநீர் எடுப்பதுபோல) அதில் இருந்து வரும் தென்னப்பூவின் இனிப்பு நீரான, தென்னம்பூநீர் குளிர்ந்த முறையில் சேகரிக்கப்படுகிறது. அப்படி சேகரிக்கப்பட்ட தென்னையின் தேன், அல்லது தென்னைத்தேன், (ஏன் தென்னைத் தேன் என்று சொல்கிறேன் என்றால், தேனீக்கள் இதைத்தான் விரும்பி எடுத்துக் கொண்டு வந்து தேனாக மாற்றுகின்றன) தென்னம்பால் என்று இதைச் சொல்கிறார்கள் நான் இதைத் தென்னந்தேன் என்று கூறுவேன்.
இப்படியான ஊட்டமும், சுவையும் கொண்ட ‘தென்னீரா’ நான்மடிப்பொதி (tetra packing) முறையில் அடைக்கப்பட்டு சுவை மாறாமல் நுகர்வோரிடம் சேர்க்கப்படுகிறது.
இது ஒரு புதிய முறையாக தென்னைச் சந்தைப்படுத்தலில் பார்க்கப்படுகிறது. இதை விரிவான முறையில் சந்தைப்படுத்தும் முயற்சியில் 1200 உழவர்களைக் கொண்ட தென்னை உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மூலம் இறங்கியுள்ளனர். இதன் வருமானம் அனைத்துச் செலவினங்கள் போக ஈவுத் தொகை கூட்டமைப்பினருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அத்துடன் இந்தச் சுவைநீர் எடுக்கப்படும் தென்னைகள் யாவையும், இயற்கைவழி வேளாண்மைக்குள் இருக்கின்றன. ரசாயன வேளாண்மை முறையில் செய்யப்படும் தென்னை மரங்களில் இருந்து தென்னீரா எடுக்கப்படுவதில்லை.
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். அதற்கான தரச்சான்றும் பெற்றுள்ளார்கள்.
ஏற்றுமதித் தரமான இதைச் சந்தைப்படுத்த விரும்பும் இளைஞர்கள், ஆர்வலர்கள் தென்னீரா நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஏனென்றால் எத்தனையோ ரசாயன செயற்கைப் பானங்களைக் குடிக்கும் மக்கள் அவற்றைத் தவிர்த்து இப்படியான சத்துக்கள் நிறைந்த பானங்களைப் பருகிப் பயன்பெறலாம். தமிழ்நாட்டின் பொருளாதாரம் பெருகும். இப்படிப்பட்ட மக்கள் நிறுவனங்களைக் கட்டிக் காப்பது நம் அனைவரின் கடமையாகும்.
பாமயன்
பாமயன் எனப்படும் மு.பாலசுப்பிரமணியன் சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். காரல்மார்க்சு, காந்தியடிகள், குமரப்பா ஆகியோரது கருத்துகளால் உந்தப்பட்டு தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர். கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து கிராமப்புற மேம்பாடு குறித்தும், பசுமைப் பொருளாதாரம் குறித்தும் பேசியும், எழுதியும், செயல்பட்டும் வருபவர்.
பாமயன் எனப்படும் மு.பாலசுப்பிரமணியன் சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். காரல்மார்க்சு, காந்தியடிகள், குமரப்பா ஆகியோரது கருத்துகளால் உந்தப்பட்டு தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர். கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து கிராமப்புற மேம்பாடு குறித்தும், பசுமைப் பொருளாதாரம் குறித்தும் பேசியும், எழுதியும், செயல்பட்டும் வருபவர்.